அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் மொத்தம் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்துள்ளது. இதுவரையில் 15 கட்டமாக பேச்சு வார்த்தை நடந்துள்ளன. ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்தில் உயர்வு எவ்வளவு என இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்று, கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதற்கிடையே, டிசம்பர் 27, 28-ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்ததால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பேச்சுவார்த்தை மாலை 4 மணிக்கு தொடங்கியது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், 2.57 சதவீத ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு, 2.44 சதவீத ஊதிய உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒரு முறை, 2.37 சதவீத ஊதிய உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய தொழிற்சங்க தரப்பினர் ஆலோசனை நடத்தினர்.
3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என 2.57 சதவீதம் வழங்க வேண்டுமென தொழிற்சங்க தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், செயலர் டேவிதார் உள்ளிட்ட அதிகாரிகள் தனியாக சுமார் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் அமைச்சர் தலைமையில் கூட்டம் நடந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டாத நிலையில், ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment