போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை முறிவு: காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது
சென்னை
சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம், திரண்டு நிற்கும் பயணிகள்
போக்குவரத்து சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை கூட்டாக அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பல சுற்று பேச்சு வார்த்தைக்கு இடையே டிசம்பர் மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர் டிச.27 க்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
பின்னர் டிச.27 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பு 2.4 சதவித ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்க தொழிற்சங்க தரப்பு 2.5 என கோரிக்கை வைக்க முதல்வருடன் பேசிவிட்டு அறிவிக்கிறேன் என ஜன.3-க்கு பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பத்து சுற்றுக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படாத நிலையில் தொழிலாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இன்று பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடியாவிட்டால் வேலை நிறுத்தம் என்ற முடிவில் 10க்கும் மேற்பட்ட முக்கிய சங்கங்கள் இருந்தன.
இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாலை பேச்சு வார்த்தை இழுபறி என்ற தகவல் வெளியானவுடன் ஆங்காங்கே வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசு தன் நிலையிலிருந்து இறங்கிவர மறுத்துவிட்டது. இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தனர்.
பல்வேறு கோரிக்கைகளையும், தொழிலாளரின் நிலை குறித்து கூறியும் அரசு தரப்பில் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே எங்கள் கூட்டுக்குழு முடிவுப்படி பிரச்சினை தீரும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என தொமுச தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
எங்கள் கூட்டுக்குழுவில் உள்ள தொழிலாளர் 95 சதவீதம் பேர் உள்ளனர். வேலை நிறுத்தத்தில் அவர்கள் இந்த நிமிடம் முதல் ஈடுபட உள்ளனர். வேறு ஆட்களை வைத்து பேருந்தை இயக்கினால் அதற்கான எதிர்வினை இருக்கும். பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைத்தாலும் தயாராகவே இருக்கிறோம் என சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.
மக்கள் இதனால் அவதியுறுவது எங்களுக்கு வருத்தம். அதனால் தான் இதுநாள் வரை பேச்சுவார்த்தை நடத்தினோம். வேலை நிறுத்தம் மக்களைப் பாதிக்கும் என்ற கவலை அரசுக்கு இல்லை.
ஆகவே எந்த விதத்திலும் நாங்கள் அதற்கு பொறுப்பாக முடியாது என்று தெரிவித்த சவுந்தரராஜன் இதுபற்றி நீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடர்ந்தால் எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் வைப்போம் என்று கூறினார்
No comments:
Post a Comment