ரகுவின் மரணத்துக்கு அலங்கார வளைவு காரணமல்ல. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இளைஞர் ரகு விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. ஆனால், ரகு மரணத்துக்கு அலங்கார வளைவு காரணமல்ல. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம். ரகு எப்படி இறந்தார் என்பதற்கான ஆதாரத்தையும், தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிப்போம். இதனிடையே ரகுவின் மரணம் குறித்த பொய்யான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன. அரசு மீது எந்தக் குற்றமும் சுமத்த முடியாததால் விரக்தியின் விளிம்பில் உள்ளார் ஸ்டாலின்.
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 6-ம் தேதியில் இருந்து தொடங்குகிறோம். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மழை தொடர்வதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற நீரை சேமிக்கும் அளவிற்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை அரசு துரிதமாக செய்து வருகிறது'' என்றார் முதல்வர் பழனிசாமி.
முன்னதாக, கடந்த நவம்பர் 25-ம் தேதி அன்று கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு பல இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. அவிநாசி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பு அருகே அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட விபத்தில் மென்பொருள் பொறியாளர் ரகு (32) என்பவர் பலியானார். அமெரிக்காவில் பணியாற்றிய ரகு, திருமண ஏற்பாட்டுக்காக கோவை வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. அலங்கார வளைவில் மோதி விழுந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ரகுவின் மரணத்துக்கு அலங்கார வளைவுகள் காரணமில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment