செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்க நடவடிக்கைகள் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கத்தால் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக சரிந்தது. அதன் பிறகு தற்காலிக தேக்கம் மாற்றமடைந்து ஜிடிபி வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய புள்ளிவிவரத்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள தகவல்களின்படி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என கூறியுள்ளது.
முன்னதாக ஐஎம்எப் வெளியிட்ட எதிர்பார்ப்பில் இந்திய ஜிடிபி 2017-18-ம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என கணித்தது. தவிர ஆசிய மேம்பாட்டு வங்கி, பொருளாதார மேம்பாட்டு கழகம் (OECD) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியை 7 % அல்லது 6.7 % சதவீதம் என்கிற அளவில் இருக்கும் என்று கணித்திருந்தன.
நிதிப் பற்றாக்குறை இலக்கு
நடப்பாண்டு நிதிப் பற்றாக்குறை இலக்கில் அக்டோபர் மாதம் வரையில் 96.1 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை என்பது அரசின் செலவினங்களுக்கும் மற்றும் வருவாய்க்கும் இடைப்பட்ட வித்தியாசமாகும். இது தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், நிதிப் பற்றாக்குறை ஏப்ரல்- அக்டோபர் மாதங்களில் ரூ.5.25 லட்சம் கோடியாக உள்ளது.
2017-18 நிதியாண்டு ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை இலக்கை 3.2 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு வைத்தது. கடந்த நிதி ஆண்டில் இது 3.5 சதவீதமாக இருந்தது. மத்திய தலைமை கணக்கு அறிக்கைபடி, நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏழு மாதங்களில் அரசின் வருவாய் ரூ.7.29 லட்சம் கோடியாக உள்ளது. இது பட்ஜட் எதிர்பார்ப்பில் 48.1 சதவீதமாகும். ஒட்டுமொத்தமாக நடப்பாண்டில் ரூ.15.15 லட்சம் கோடி வருவாய் திரட்ட இலக்கு வைக்கப்பட்டது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் எட்டப்பட்ட இலக்கு 50.7 சதவீதமாக இருந்தது.
மேலும் அக்டோபர் மாதம் வரையில் அரசின் மொத்த செலவினங்கள் ரூ.12.92 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது பட்ஜெட் இலக்கில் 60.2 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் எட்டப்பட்ட இலக்கு 58.2 சதவீதமாக இருந்தது. -பிடிஐ
No comments:
Post a Comment