சட்டரீதியாக மத்திய தணிக்கை குழு படம் பார்த்து சான்றிதழ் வழங்கிய பின் தீபாவளி அன்று வெளியான விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் மருத்துவமனை கொள்ளை, பணமதிப்பிழப்பு பாதிப்பு, ஜிஎஸ்டி வரி சம்பந்தமாக கடுமையான விமர்சனங்கள் இருந்தன. படம் வெளியான தியேட்டர்களில் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் கோட்டை வடிவில் சென்னை ராயபுரத்தில் உள்ள தியேட்டர் முகப்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முதல் காட்சி படம் முடிந்து வெளியில் வந்த ரசிகர்களிடம் ஊடகங்கள் கருத்து கேட்டபோது தமிழகம் முழுவதும் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று ஒரே மாதிரியான கருத்து கூறப்பட்டது. பேச விட்டு கருத்து சுதந்திரத்தை முடக்குவது காங்கிரஸ். கருத்து சுதந்திரத்தை கருவிலேயே முடக்குவது பாரதிய ஜனதா கட்சி என்பதை மோடியின் தமிழக பிரதிநிதியும் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷணன் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மெர்சல் பட விவகாரத்தில் தமிழக மக்களை பிரதிநிதித்துவபடுத்தி மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பெருமைக்குரியவர், தமிழ் சினிமாவை வளர்ப்பதற்கு பாடுபட வேண்டியவர். மக்கள் நலம் பேசும் சினிமாவையும், அதனுடன் தொடர்புடைய கலைஞர்களையும் தன் அதிகாரத்தின் மூலம் மிரட்டுகிற பேச்சுகளை கேட்டு அரசியல் தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அரசே நேரடியாக ஒரு படத்தையும் அதன் கலைஞர்களையும் மிரட்டியதற்கு சமம் பொன் ராதாகிருஷ்ணனின் பேச்சு. ஒரு திரைப்படத்தின் ஆயுள் அதிகபட்சம் நான்கு வாரங்கள்தான். இதில் பேசப்படும் அரசியல் கருத்துகள் தமிழக அரசியலில் தற்போது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவதும் இல்லை. தமிழகத்தில் தங்கள் கட்சியை பலப்படுத்த ரஜினிகாந்த், கமலஹாசன் என வலை வீசியும் மதவாத வலைக்குள் மாட்டிக் கொள்ள அந்த மக்கள் கலைஞர்கள் தயாராக இல்லை. இந்த நிலையில் ஜி.எஸ்.டி மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பற்றி மெர்சல் படத்தில் காட்சியும், வசனங்களும் வருவதை அறிவுப்பூர்வமாக ஏற்க பொன்னாரால் முடியவில்லை. மத்தியில் ஆளும் இவரது கட்சியின் 'அதிவிசுவாசிகள்' தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும்போது மத்திய அரசை விமர்சிக்கவும், ஊழலை பேசவும் உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று தெருவோர அரசியல்வாதி போல் பேசினார் பொன்னார். சங்பரிவாரில் இவருக்கு கற்றுக் கொடுத்த வன்முறை வழி இதற்கு உதவியிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. தங்களுக்கு எதிராக எந்த கருத்து வந்தாலும் பொறுமையாக, பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் அடாவடி தனமாக அதிகார ஆணவத்துடன் பேசியிருப்பது தமிழக மக்களுக்கே அவமானம். ஒரு திரைப்படத்தை பார்க்காமலே அப்படத்திற்கு எதிரான கருத்தை வெளியிட்டு வரலாற்று தவறை செய்திருக்கிறார்கள் பொன்னாரும், தமிழிசையும். " மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, படக்குழுவினரையும், தயாரிப்பாளரையும் மிரட்டி, தாங்கள் விரும்பாத காட்சிகளை, அரசை விமர்சிக்கும் வசனங்களை நீக்க வேண்டும் என்பதில் வெற்றியடைந்து இருக்கிறார் மோடியின் தமிழக பிரதிநிதி பொன் ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், சினிமா ரசிகர்களும், படைப்பாளிகளும் மெர்சல் படத்தை ஆதரித்து பேசி வரும் நிலையில் அதற்கு எதிரான நிலை எடுத்து தனது அதிகாரத்தினை படைப்பு சுதந்திரத்துக்கு எதிராக பாஜாக பயன்படுத்துவதற்கு எதிராக திரையுலகம் ஒன்று கூடும் காலம் வெகு தொலைவில் இல்லை," என்கின்றனர் திரையுலகினர்.
No comments:
Post a Comment