நடப்பு நிதி ஆண்டில் 6.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார வல்லுநனருமான அர்விந்த் பனகாரியா கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக பேரியல் பொருளாதாரம் பலமாக இருக்கிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவீதம் என்னும் அளவிலே இருக்கிறது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டு முடிவில் 6.5 சதவீதம் என்னும் அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று கூறியவர், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வரும் 2018-19-ம் நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக நிதிப்பற்றாக்குறைக்கு நிர்ணயம் செய்த இலக்கை தளர்த்தலாமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தனிப்பட்ட முறையில் வேண்டாம் என்பதே என் கருத்து என்று கூறினார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிடலாமா என்று கேட்டதற்கு, பிரதமர் நம்பினால் ஒரு முறை சலுகைகளை குறித்த அறிவிப்புகளை வெளியிடலாம். நீண்ட கால கவர்ச்சி திட்டங்களை வெளியிட வேண்டாம். நீண்ட கால திட்டங்களை அறிவித்தால் அவற்றை திரும்ப பெற முடியாது. தவிர அவை தேசிய நலனுக்கு எதிரானது என்றார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை ஆரம்பத்தில் வறட்சி பாதித்த 200 மாவட்டங்களில் கொண்டு வந்தனர். அதன் பிறகு அந்த திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. இது போன்ற திட்டங்கள் நீண்ட காலத்துக்கு நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் ஒருமுறை மட்டுமே ஏதேனும் இலவச பொருட்களை அறிவிக்கின்றன. இத னால் பாதிப்புகள் குறைவு என்று கூறினார்.
9% வளர்ச்சி சாத்தியம்
கடந்த காலாண்டில் 6.3 சதவீத வளர்ச்சி என்பது ஏமாற்றம் அளிக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் இந்த சமயத்தில் 9 சதவீத வளர்ச்சி என்பது சாத்தியம் என உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment